சமத்துவம்: அதிகாரம் இரண்டு

எனது முந்தைய பதிவிற்குக் பதில் வினையாற்றிய அனைவருக்கும் நன்றி.

“உலகில் எந்த இரண்டும் சமமாக இருக்க முடியாது” – இது இயற்பியல் விஞ்ஞான விதி.
“உலகில் எந்த ஒரு உயிரினத்தின் உருவாக்கமும் ஆண் பெண் இருவரின் சமமான பங்களிப்பில் மாத்திரமே சாத்தியம்” – இது உயிரியல் விஞ்ஞான விதி.

“ஆணும் பெண்ணும் சமம்” என்ற உண்மையை உணர மறுக்கிறவர்கள், அதற்குக் கூறும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது, “ஆண் வேறு; பெண் வேறு. உலகில் தோன்றிய ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அதனால் சமம் என்பது ஏமாற்று வாதம்” என்பதுதான்.
தனித்துவம் வாய்ந்த மனிதர்களும் மிருகங்களும் பறவைகளும் இன்னபிற உயிரினங்களும், தாயின் கருமுட்டையும் தந்தையின் விந்தணுவும் இணைந்த சரிசமமான கலவையாக, “ஆண்பாதி பெண்பாதி” என்ற ஆண்-பெண் சமத்துவத்திற்கு சாட்சியாக நிற்கின்றன.

உயிரினம் தோன்றிய ஆரம்பகாலத்தில் ஆண்-பெண் என்ற பாலினங்கள் கிடையாது; ஒற்றை பாலினம் தான் இருந்தது என்று உயிரியல் விஞ்ஞானம் கூறுகிறது. ஒற்றை பெற்றோரிடமிருந்து பிறக்கக்கூடிய புதிய உயிரினத்திற்கு பரம்பரை குறைபாடுகளிலிருந்து தப்பிக்க வழியில்லாத காரணத்தினால்,  பரிணாம வளர்ச்சியின் வாயிலாக ஆண்-பெண் என்ற இரண்டு பாலினங்களை உருவாக்கியது இயற்கை. பிறக்கின்ற புதிய உயிரினத்தின் தரத்தை மேம்படுத்தத்தான் ஆண்-பெண் என்ற இரண்டு வேறுபட்ட உடற்கூறே தவிர, அதை வைத்துக்கொண்டு ஆணும் பெண்ணும் சமமில்லை என்று அபத்தமாக பேசுவதற்கு அல்ல.

ஆண் இல்லையேல் பெண்ணில்லை; பெண் இல்லையேல் ஆண் இல்லை. இருவரின் சரிசமமான பங்களிப்பு இல்லையேல், இப்பூவுலகில் உயிரினங்கள் இல்லை.
அதுமட்டுமில்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடற்கூறு தான் வேறு; உயிர் ஒன்றுதானே? ஆண் உயிர் சற்று விலை அதிகம், பெண் உயிர் சற்று விலை குறைவு என்று யாரேனும் வாதிடுவார்களா?

பால்: பொருட்பால்
அதிகாரம்: மானம் (Honour)

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்
-திருவள்ளுவர்

விளக்கம்: மு வரதராசனார்

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாதக் கவரிமான் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

திருவள்ளுவரின் கூற்றுப்படி மானம் என்பது உயிருடன் சார்பு உடையது. இன்னும் தெளிவாகக் கூறுவது என்றால் உயிரை விடவும் பெரியது; மேலானது.
உயிரே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் எனும்போது, உயிரினும் மேலான உரிமை, கௌரவம், மரியாதை, அங்கீகாரம் இவையெல்லாம் சமமாகத்தானே இருக்க முடியும்? உடல் சார்ந்த அன்பு, காதல், பாசம், காமம், இனப்பெருக்கம் இவற்றில்தான் விட்டுக்கொடுத்தல், இட்டுநிரப்புதல் சாத்தியமே அன்றி, உயிரைச் சார்ந்த மானம், மரியாதையில் அல்ல.

சிலபல வருடங்களுக்கு முன் பெண்ணுக்கு வருமானம் ஈட்டத் தெரியாமல் இருந்தது; ஆணுக்குத் தன் தினசரி வேலைகளைச் செய்து கொள்ளத் தெரியாமல் இருந்தது. ஆகையால் ஒருவருக்கு ஒருவர் தேவைப்பட்டனர். ஆனால், தற்போது, வெளி உலகை தன்னந்தனியே நின்று நோக்கும் தன்னம்பிக்கை பெண்ணுக்கு வந்து இருப்பது மட்டுமன்றி, தான் உண்ணும் உணவை தானே சமைத்து, கழிப்பறை முதற்கொண்டு தான் வாழும் வீட்டில் அனைத்தையும் சுத்தப்படுத்தி வைத்துக்கொள்கிற திறமை ஆணுக்கும் வந்து இருக்கிறது.

சமூகத்தில் எப்படி ஒரு விவசாயிக்கு கொத்தனாரின் உதவி தேவையோ, எப்படி ஒரு கொத்தனாருக்கு தையல்காரரின் தயவு தேவைப்படுகிறதோ, அது போல எந்த ஒரு தனிமனிதருக்கும் சமூகத்தின் மற்ற மனிதர்களின் உழைப்பும் அக்கறையும் தேவை. எல்லாரும் விவசாயம் செய்தால் உடுக்க உடையின்றி மானிடம் வாடிப்போகும். ஒவ்வொருவர் ஒவ்வொரு வேலை செய்து பயன்களை அனைவரும் பங்குபோட்டு கொண்டால் மட்டுமே எந்தத் தனிமனிதரும் வாழ முடியும்.

சமூக அளவிலன்றி வீட்டளவில் பார்த்தாலும், பெற்றோர்-பிள்ளை, உடன்பிறப்பு, தோழர் என்று அனைத்து உறவுகளிலும் ‘இட்டு நிரப்பதல், நிறைகுறைகளை சமன் செய்தல், கூடி வாழ்ந்து அன்பைப் பெருக்குதல்’ ஆகியவை அவசியம். கணவன் மனைவி உறவு இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஆறாம் அறிவு பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் (ஆணுக்கும் கூட) தன்மானமும் சுயமரியாதையும் உயிரைக் காட்டிலும் பெரியது. கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதையாக, இவை இரண்டையும் விட்டுக்கொடுத்து வேறு எதை வாங்கப் போகிறாள் பெண்?

“புகைப்பிடித்தல், மது அருந்துதல், இன்னபிற ஒழுக்கக்கேடான செயல்களில் எல்லாம் ஆணுடன் பெண் சரிசமமென போட்டியிட வருவாள்” என்று யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அன்பு, அறம், ஞானம் காட்டிய வழியில், தன்மானத்தையும், சுயமரியாதையையும் விட்டுக்கொடுக்காமல் சமத்துவத்திற்கு சாட்சியாக பெண் நிற்பாள்.

“ஆணும் பெண்ணும் சமம்” என்ற அடிப்படை உண்மையை ஒருவரால் உணர முடிந்தாலும், முடியாவிட்டாலும் அவரது உடலே சமத்துவத்தை பறைசாற்றிக்கொண்டுதான் இருக்கிறது.

2 thoughts on “சமத்துவம்: அதிகாரம் இரண்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s