சமத்துவம்: அதிகாரம் மூன்று – பரிணாம உயிரியலும் இரு பால்களும்

ஆணும் பெண்ணும் சமம் என்றால் ஆண்-பெண் என்று இரு பால்கள் எதற்கு? பாக்டீரியாவை போல பூஞ்சையை போல சில செடி கொடி மரங்களை போல மனிதர்களும் ஒருபாலினத்தவர்களாகவே இருந்திருக்கலாமே? இரு பால்கள் தோன்றியதற்குக் காரணமாக பரிணாம உயிரியல் என்ன சொல்கிறது?

உயிர்கள் முதன்முதலில் தோன்றிய போது ஒரு பால் மட்டுமே இருந்ததாக அறியப்படுகிறது. பரிணாம வளர்ச்சியின் காரணமாக சிலபலகோடி வருடங்கள் கழித்து இரண்டு பால்களாக உயிர்கள் பிரிய தொடங்கின.

ஒரு பாக்டீரியாவின் ஜனத்தொகையை எடுத்துக்கொள்வோம். 100 பாக்டீரியாக்கள் இருந்தால், ஆளுக்கு ஒரு பிள்ளை பெற்றாலும் 100 பாக்டீரியாக்களை உருவாக்கிவிடலாம். ஆனால் 100 மனிதர்கள் இருந்தால், ஆளுக்கு ஒரு பிள்ளை பெற்றால் 100 மனிதர்கள் உருவாக மாட்டார்கள். எத்தனை பெண்கள் உள்ளார்களோ அத்தனை பிள்ளைகளே உருவாகும். கிட்டத்தட்ட அது 50% சதவிகிதமாக தான் இருக்கும். மக்கள்தொகையில் பாதியை அடுத்த தலைமுறை உருவாக்கம் செய்ய முடியாத வகையில் இயற்கை ஏன் படைக்க வேண்டும்? இதில் ஏதேனும் அனுகூலம் இல்லாமல் இயற்கை இதை செய்திருக்குமா என்ன? அப்படியே படைத்தாலும், இவ்வளவு பெரிய நஷ்டமான ஒரு அம்சத்தை வைத்துக்கொண்டு மானிடப்பிறவி தழைத்து இருக்குமா?

ஒரு பாக்டீரியாவுக்கு பிறக்கும் பிள்ளை துல்லியமாக தன் தாயைப் போலவே இருக்கும். Clone எனப்படும் நகலியாகவே இருக்கும் என்பதால், தரமான DNA கொண்ட தாய்க்குப் பிறக்கும் பிள்ளை தரமான பண்புகளுடையதாகவே இருக்கும். அதேசமயம், குறைபாடுகள் கொண்ட தாய்க்குப் பிறக்கும் பிள்ளையும் அச்சு அசல் தாயைப் போலவே இருக்கும். சில சூழ்நிலைகளை சமாளிக்க தெரியாத தாய்க்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும் அச்சூழ்நிலைகளில் அவைகளுக்குப் பிழைக்கத் தெரியாமல் தான் இருக்கும்.

ஒரு எலியை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு முறையும் சுமார் எட்டு பத்து குழந்தைகள் பெற்றெடுக்கும். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். காரணம், எலி இருபாலினம் என்பதுதான். ஒரே தாய்-தந்தையரிடமிருந்து சரி பாதியான DNAவை பெற்று பிறக்கும் எந்த இரு பிள்ளைகளும் ஒன்றுபோல இல்லாமலிருக்கும் என்பதால் தாய்க்கோ தந்தைக்கோ எவ்விதமான குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்ய ஒரு வாய்ப்பு அமைகிறது.

பூனைகள் அதிகம் நடமாடும் இடத்தில் தங்கியிருக்கும் ஒரு எலி தம்பதியரை எடுத்துக்கொள்வோம். தாய்க்கு வேகம் பத்தாது என்று எடுத்துக்கொள்ளலாம். அதேபோல தந்தைக்கு கண் பார்வை துல்லியமாக இல்லை என்று வைத்துக்கொள்வோம். பிறக்கும் பிள்ளைகளில் சுமாராக கால் பங்கிற்கு வேகமும் பத்தாமல் கண்பார்வையும் கோளாறாக இருக்கும். இன்னொரு கால் பங்கிற்கு, தந்தையின் வேகத்தோடு சேர்ந்து பார்வை கோளாறும் வரும். மற்றொரு கால் பங்கிற்கு தாயின் துல்லியமான கண்களும் மெத்தனமும் வந்தாலும், கடைசி கால் பங்கிற்கு தந்தையின் வேகமும் தாயின் தெளிவான பார்வையும் வந்தே தீரும்.

இதில் இருவரின் குறைகளையும் கொண்டு பிறக்கும் பிள்ளைகள் பிழைப்பது அரிதுதான் என்பதால், மூன்றாவது தலைமுறைக்கு இந்த குறைகள் செல்வதற்கான வாய்ப்பு குறைகிறது. தாய் தந்தையர் இருவரின் பலங்களையும் கொண்டு பிறக்கும் குழந்தைகள் கண்டிப்பாக தாய் தந்தை இருவரை விடவும் வலுவான இரண்டாம் தலைமுறையை உருவாக்கும்.

இந்த எலி தம்பதியினர் ஒருபால் உயிரினமாக இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்? அந்த தந்தைக்கு பிறக்கும் அனைத்து பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அதற்கு அடுத்தடுத்தத் தலைமுறைகளும் கூட பார்வைக் கோளாறுகள் கொண்டிருக்கும். தாயின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வேகத்தை பொருத்தவரையில் அதே கதிதான்.

அதிகாரம் இரண்டில் ஏற்கனவே கூறியதைப் போல பிறக்கின்ற புதிய உயிரினத்தின் தரத்தை மேம்படுத்தத்தான் ஆண்-பெண் என்ற இரண்டு வேறுபட்ட உடற்கூறே தவிர, அதை வைத்துக்கொண்டு ஆணும் பெண்ணும் சமமில்லை என்று அபத்தமாக பேசுவதற்கு அல்ல.

பின்குறிப்பு:
விருப்பம் காரணமாக பரிணாம உயிரியலில் சில பதிவுகளையும் புத்தகங்களையும் வாசித்து இருக்கிறேன். அதன் வாயிலாக தெரிந்து கொண்ட விஷயங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். மற்றபடி நான் இத்துறையில் நிபுணர் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், இப்புத்தகத்தையோ அல்லது பரிணாம உயிரியல் சார்ந்த வேறு புத்தகங்களையோ வாசிக்கலாம்.

2 thoughts on “சமத்துவம்: அதிகாரம் மூன்று – பரிணாம உயிரியலும் இரு பால்களும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s