என் பார்வையில் மகாபாரதம்

உலகிலேயே என்னை மிகவும் ஈர்த்த கதை, என்னை அதிகம் பாதித்த காவியம், என் குணத்தின் முக்கிய அம்சங்களை வடிவமைத்த இதிகாசம் மகாபாரதம் தான். என் தாய்தந்தையரின் கூட்டைவிட்டு வெளியே வந்து முதன்முதலாக தனியே பறக்க முயற்சி செய்த (ஏன் பார்வையில், வெற்றிகரமாகவும் பறந்த) இருபத்தி ஐந்து வயதில் அதை வாசிக்க நேர்ந்ததுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

“உலகத்தில் நல்லோர் உளர்; தீயோரும் உளர். நாம் நல்லவராகவே எந்த சூழ்நிலையிலும் இருக்க வேண்டும்” என்ற கறுப்பு-வெள்ளை உலகத்தை தானும் நம்பி பிள்ளைக்கும் சொல்லிக்கொடுத்த பெற்றோருக்கு பிறந்த எனக்கு, “உலகில் நல்லவர் என்றொருவர் இல்லை; தீயவர் என்றொருவரும் இல்லை. வெற்றிப் பெறுபவனை நல்லவனாகவும் தோல்வி அடைபவனை கெட்டவனாகவும் உலகம் கூறும்” என்றும், “அடிப்படையில் அனைவரும் சுயநலவாதிகளே. தனக்கு நல்லது செய்பவனை நல்லவனாகப் பார்ப்பதும், இடைஞ்சல் தருபவனை கெட்டவனாகப் பார்ப்பதும் மனித இயல்பே” என்றும், போகிற போக்கில், நான் சற்று கண்ணசர்ந்த நேரத்தில் என் ஆழ்மனதில் பொறித்துவிட்டார் மகா வியாசர். இதில் வேடிக்கை என்னவென்றால் நான் முதன்முதலில் மகாபாரதத்தை வாசித்துத் தோராயமாக ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும். ஆனால், என் அடிப்படை குணாதிசயம் இந்த மகத்தான இலக்கியத்தை வாசித்து கொண்டிருந்த சமயத்தில் என்னை அறியாமலே மாறி இருக்கிறது என்பது இன்றுதான் எனக்கு உறைத்தது.

முதன்முதலில் வாசித்ததுத் தோராயமாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்றதும், கடந்த ஐந்து வருடங்களில் பத்தாயிரம் முறை வாசித்துக் கிழித்துவிட்டேன் என்று எண்ணவேண்டாம். Devdutt Pattanaik-ன் முன்னூறு பக்க “ஜெயா”வை அலுவலக நூலகத்தில் இருந்து எடுத்து படித்தப் பின்னர் ஒருமுறைகூட முழுதாக இந்த பிரம்மாண்டமான புராணத்தை வாசிக்க இயலவில்லை. இரண்டு வருட சுயாதீனமான வாழ்வை மும்பையில் வாழ்ந்த பின்னர், “நான் என் சொந்தகாலில் நிற்கக் கற்றுக்கொண்டாகிவிட்டது; எனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கும் வேலைகளில் மூழ்கும் முன்னர், எனக்குப் பழக்கமான, நான் வேலையெதுவும் செய்ய அவசியமில்லாத வீட்டில் சில காலம் சுகப்பட்டு இருக்க விரும்புகிறேன்” என்று சென்னை வந்துசேர்ந்தபோது, வர்த்தமானன் பதிப்பகத்தின் மூன்றுபாக மகாபாரதத் தொகுப்பு ஒன்றை என் தாய்வழி பாட்டனார் வாங்கி வைத்து இருந்ததைக்கண்டு அளவில்லா ஆனந்தம் கொண்டேன். ஆசையாசையாக எடுத்துப் புரட்ட ஆரம்பித்து, முதல்பாகத்தின் கடைசி பக்கம் கண்ணுக்கெட்டும் தூரத்தில் தெரியவரும் சமயத்தில், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏதோ ஒரு சண்டை வந்துத்தொலைக்க, எப்போதும் பகுத்தறிவு பேசுகிற பெற்றவள் பாரதக் கதையை வாசிக்கும் வீடு ரெண்டாகபிளக்கும் என்று சொல்வதுண்டு என்றும், அதனால் துணிந்து வாசித்து அதை சோதித்து பார்க்க வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டதால் அத்தோடு அந்த புத்தகம் பரணுக்குப் போய் சேர்ந்தது. பின்னர், திருமணத்திற்குப் பின்னும் அதை எடுத்து வாசிக்கும் ஆசை மட்டும் ஏனோ வரவே இல்லை. சம்பந்தமே இல்லாமல் எங்களுக்குள் ஏதோவொரு சச்சரவு வந்து, அதற்கு இதுதான் காரணமோ என்று தோன்றி, பின்னர் என் விருப்பக் காவியம் வெறுப்புக் காவியமாக மாறிவிட்டால் என்னாவது என்ற யோசனை காரணமாக இருக்கலாம். எனினும், திரைப்பட வடிவிலும் தொடர்கதை வடிவிலும் கேலிச்சித்திரம் வடிவிலும், அத்தோடு இணையதளத்திலும் மகாபாரதம் என்ற சொல்லைக் காணும்போதெல்லாம் நின்று கவனிக்காமல் சென்றதில்லை.

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டு அதை நம்பும் உள்நோக்கம் இருந்தும் உலகில் சுற்றி நடக்கும் விஷயங்களை பார்த்து அதை நம்ப முடியாமல் தவித்தது எல்லாம் பீஷ்மரின் கடைசி காலம் கண்டதும் சுக்குநூறாகிப் போனது. தான் வலியவன் என்பதால் தன் காரணங்கள் பிறரின் விருப்பங்களைக் காட்டிலும் மேலானது என்று தீர்மானித்து, தன் வாக்கு பொய்க்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக அம்பை, சகுனி (மற்றும் அவரைச் சார்ந்தோர்) உட்பட எண்ணற்றோர் வாழ்வை பலி கொடுத்தது, கடைசி காலத்தில் அம்பு படுக்கையில் படுக்க வைத்தது என்பதும், கண் முன்னே சந்ததியினர் ஒருவரையொருவர் நாசம் செய்து கொள்வதை பார்க்கச் செய்தது என்பதும் ஆறுதல் அளிக்கிறது. என்றாலும், மூன்று தலைமுறை மனிதர்கள் வாழும்காலம் இவர் ஒருவரே சகல மரியாதைகளும் வசதிகளும் பெற்று வாழ்ந்த பின்னர் என்ன விளைந்து என்ன பயன் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் விவரிப்பது ஒரு கட்டுரையில் ஆகாது என்ற காரணத்தால் வேறெந்த கதைமாந்தர்கள் பற்றியும் தனித்தனியாகக் குறிப்பிடுவதைத் தவிர்க்கிறேன்.

இதுவே நல்லொழுக்கத்திற்கு இலக்கணம் என்று கூறப்படும் அத்தனை குணங்களையும் கொண்டிருந்தாலும் புத்திசாலித்தனமாக ஏதோ ஒரு இடத்தில் யோசிக்காமல்போன காரணத்தினால் ஒரு காரியத்தில் தோற்றுப் போகும் சிலரை பார்க்கையில் இரக்கம்தோன்றினாலும், நிதர்சன வாழ்க்கை இப்படித்தானே என்று புரிந்தபோது மனதிற்குள் ஏதொவொரு இடத்தில ஒளிவிளக்கு எரிந்தது. “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பதெல்லாம் சுத்தப் பொய்தான் என்றாலும், அது மனித மனம் வாழ்க்கையை வெறுத்துவிடாமல் இருப்பதற்கு அவசியப்படும் நம்பிக்கை என்பதும் புரிந்தது. ஒருவன் ஜெயிப்பதும் தோற்பதும் அவன் கையில் மட்டுமே இல்லை என்பதும், விதி என்பதை நம்பவில்லை என்றாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்றோ சாதகநிலை (chance/probability) என்ற ஒன்றோ அதில் பங்கு வகிக்கிறது என்பதும் பிடிபட்டது.

சூழ்ச்சி செய்வது ஒன்றும் தவறு இல்லை என்று ஒரு முக்கிய கதாபாத்திரம் சொல்லும் பாடமானது, பிறர் எனக்கெதிராக யுக்திகள் கையாளும்போது அவர் பார்வையில் நியாயமாகப்படுவதை அவர் செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சியை நாலாப் பக்கத்திலிருந்தும் ஆராயும் அறிவையும் அளித்திருக்கிறது. சுருக்கமாக சொல்லப்போனால் யதார்த்த வாழ்க்கையை எனக்கு வியாசரை விட அதிகமாக யாரும் கற்றுக்கொடுக்கவில்லை என்பதே உண்மை.

மகாபாரதத்தை போல வாழ்க்கையை புரியவைக்கும் இலக்கியம் உலகத்திலேயே இல்லை என்று கூற வேண்டுமானால் வேறு எதையாவது படித்திருக்கவேண்டும். அதைச் செய்யாத காரணத்தால், இது ஒரு சிறந்த நூல் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். இதுவரை முழுக் கதை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளத்தான் பாருங்களேன்.

பின்குறிப்பு:
கதை பாட்காஸ்டின் (Kadhai Podcast) பொன்னியின் செல்வன் கதை கடந்த சில நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். கவிதா அக்காவின் இனிமையான குரலில் பேச்சு வழக்கில் சொல்லப்படும் கதை மிக அருமை. அதையும் கேட்டுப் பாருங்களேன். அனேகமாக, நான் அடுத்து வாசிக்கப் போகும் தடிப் புத்தகம் அதுவாகத்தான் இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s