பாவம் ஆண்கள்!

எப்பொழுதும் பெண்கள் பிரச்சினையையே யோசித்துக்கொண்டிருக்கும் எனக்கு ஆண்களைப் பற்றி யோசித்தால் என்ன என்று தோன்றியது. அப்பப்பா..! என் சமகால ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் எத்தனை!!

தன் முடிவுகளை தானே எடுத்தால், “இந்த காலத்து பசங்க சொல்பேச்சு கேக்கறதே இல்ல” என்று பெரியவர்கள் திட்டுவார்கள். கேட்டு நடந்தால், “இவ்வளவு பெரிசா வளர்ந்திருக்க, இன்னும் சுயமா ஒரு முடிவு எடுக்கத் தெரியாதா?” என்று மனைவி திட்டுவாள்.

“நான் அப்படி பாராட்டி வளர்த்தேன் இப்படி சீராட்டி வளர்த்தேன், இன்னிக்கு நீ என்ன மறந்துட்டு உன் குடும்பத்த பார்க்கிற” என்று குறைகூறும் பெற்றோர், முக்கால்வாசி பெண்களுக்கு அமைவதில்லை. கணவனோடு சண்டை போடாமல் நல்லபடி வாழ்ந்தால் சரி என்று கூறுபவர்களே அதிகம். பாராட்டி சீராட்டி வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, ஒரு பேரப்பிள்ளை பிறந்தபின் அதற்கும் வேலை செய்யும் பக்குவம் பெண்களை பெற்றவர்களுக்கு வந்துவிடுகிறது. அதே பெற்றவர்களுக்கு மகனிடம் மட்டும் “நீ எனக்கு என்ன செய்வ?” என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

“உன்னை பெத்து வளத்து ஆளாக்கி இருக்கேன்” என்ற மெகா சீரியல் டயலாக் கேட்கும்போது தன்னலமற்ற சேவை செய்துவிட்டதாக தோன்றி, அதற்காக மகன் நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் வந்து விடுகிறது. யாரும் பொதுச் சேவை செய்வதற்காக பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை. தன் வாழ்க்கைக்கு பிடிப்பும் குறிக்கோள் என்ற ஒன்றும் வேண்டும் என்றுதான் பெற்றுக் கொள்கிறார்கள். சுயநலத்திற்காக பெற்ற ஒரு பிள்ளையை வளர்ப்பது தன்னலமற்ற செயல் கிடையாது. ஒருவேளை ஒரு குழந்தைக்கு தாய் தந்தையர் தவறிவிட்டால், அதன் பெரியப்பாவோ சித்தப்பாவோ மாமாவோ அண்ணனோ (அல்லது பெரியம்மாவோ சித்தியோ அத்தையோ அக்காவோ) வளர்த்தால், அவர்கள் நன்றி எதிர்பார்க்கலாம்.

சரி பெற்றவர்கள்தான் புரிந்துகொள்ளவில்லை என்றால், பொண்டாட்டி அதற்கும் மேல். “ஏன் உன்ன மட்டும்தான் வளர்த்தாங்களாமா? ஊர்ல உலகத்துல மத்தவங்க எல்லாம் வளர்க்கல? என்ன எல்லாம் தர்மத்துக்காகவா எடுத்துட்டு வந்தாங்க?” என்பாள். “நான் அப்படி சொல்லவே இல்லையே மா!” என்று பரிதாபமாக இவன் கூறுகையில், “ஏன் உங்கம்மா பேசறச்சே வாயில கொழுக்கட்டையா வச்சிருந்த?” என்று அவள் சீறும்போது என்ன சொல்வது என்று தெரியாமல் முழிப்பான். அதற்கும், “உங்கம்மாவை பத்தி பேசினா வாயே திறக்க மாட்டியே” என்று திட்டு விழும். பாவம் அவனும் என்னதான் செய்வான்! “எதுக்கு இப்படி என் பொண்டாட்டி கிட்ட போயிட்டு தற்பெருமை பேசுறீங்க?” என்று அம்மாவிடம் கேட்டால் ‘பொண்டாட்டி தாசன்’ என்று பட்டப்பெயர் கொடுப்பார்கள். அமைதியாக இருந்தால், “உனக்கு இருக்கிறது முதுகுத்தண்டா இல்ல ரப்பர் துண்டா?” என்று கேட்கும் ‘அன்பே சிவம்’ கமலாக மனைவி மாறிப் போவாள்.

ஒருமுறை என் அம்மா சொன்னார், “நாம் நம் பிள்ளைகளுக்கு செய்கிறோம் என்பதற்காக அவர்கள் நமக்குத் திருப்பிச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு செய்வார்கள். அவர்களும் தத்தம் பிள்ளைகளுக்கு செய்வார்கள். அதுதான் உலக நியதி”. ஆண்பிள்ளைகளை பெற்றவர்கள் இதை நினைவில் கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறேன். இப்படிப்பட்ட பெற்றோர் மீது பிள்ளைகளுக்கு அளவில்லா பாசம் பொங்கி வரும் என்றும் உத்தரவாதம் தருகிறேன். அதேபோல, முந்தைய தலைமுறையினரை கணவனால் மாற்றி விடமுடியாது என்பதையும் அவர்களின் பிற்போக்கு சிந்தனைக்காக சச்சரவு கொள்வது தம்பதியினர் இருவருக்கு மட்டுமே நஷ்டம் விளைவிக்க கூடியது என்பதையும் என் சமகால பெண்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இறுதியாக, காலம் மாறிவிட்டது என்பதை அறியாத பெற்றோரும், அப்படிப்பட்ட பெற்றோரை தன்னால் மாற்றிவிட முடியாது என்பதை புரிந்துகொள்ளாத மனைவியும் அமையப்பெற்று, இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கும் என் சமகாலத்து பாவப்பட்ட ஆண்மகன்களுக்கு ஒரு ஆலோசனை. உங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான இரு நபர்களான தாயும் தாரமும் சண்டை போட்டுக்கொள்ளாமல் இருக்க உங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும் என்ற ஒதுங்கி நின்றால் பிரச்சனை வளர்ந்துக்கொண்டு தான் போகும். வாழ்த்துக்கள்! _/\_

One thought on “பாவம் ஆண்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s