தந்தை மகற்காற்றும் நன்றி..

The Woman in the Window என்கிற திரைப்படத்தில் இரண்டு பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்: ஒருவர் இன்னொருவரிடம் தன் மகனின் குழந்தை கால புகைப்படத்தை காண்பித்து “இது என்னுடைய மகன்” என்கிறார். அதோடு நிற்காமல், “நாம் எப்போதும் ‘என்’ பிள்ளை என்று கூறிக்கொள்கிறோம்…அவர்கள் என்னவோ நமக்கு சொந்தம் என்பது போல. ஆனால் அவர்களை பார்க்கும்போது ஏற்படும் உணர்வோ அப்படி இல்லை.” என்று கூறுகையில் இரண்டாவது பெண் சட்டென்று, “நாம்தான் அவர்களுக்கு சொந்தம் என்பது போன்ற உணர்ச்சி வருகிறது” என்கிறார். முதல் பெண் ஆமோதிக்கிறார்.

"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்."
"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"

(திருவள்ளுவர் தாயையும் மகளையும் பற்றி பேசாதது ஏன் என்பது இந்தப் பதிவிற்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதால் அதைப்பற்றி இப்பொழுது விட்டுவிடலாம்.) பதின் வயதுகளில் திருவள்ளுவரின் இந்த இரண்டு குறள்களும் பரிட்சயமானபோது தந்தை மகனுக்கு செய்வதை நன்றி எனவும், மகன் தந்தைக்கு செய்வதை உதவி எனவும் ஏன் குறிப்பிடுகிறார் என்று குழம்பியதுண்டு. மாற்றி அல்லவா இருக்க வேண்டும் என்று நினைத்ததும் உண்டு. நான் பிள்ளை பெற்ற பிறகுதான் ஏன் என்று புரிகிறது.

“பிறவா வரம் தாரும்” என்று பாபநாசம் சிவன் இறைவனிடம் வேண்டுகிறார். மீண்டும் இந்த உலகில் பிறந்து அல்லல் படாமல் இருக்கவேண்டும் என்பது பல ஞானிகளின் பிரார்த்தனை. அப்படி இருக்கையில், பிறவாமல் போயிருக்கக் கூடிய ஒரு ஆன்மாவை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்து நம் பிள்ளைக்கு நாம் பெரிய கடனாளி ஆகிறோம். நம் வாழ்க்கைக்கு ஒரு பிடித்தம் வேண்டும் என்பதற்காக இந்த உலகத்தில் வாழ விருப்பமா இல்லையா என்பதை கேட்காமல் ஒரு உயிரை பிறக்க வைக்கிறோம். அதன் பின்னர் குறைந்தபட்சம் அந்த குழந்தை இந்த பூமியில் வாழ்வதற்கான வேலைகளை நாம் செய்துதானே ஆகவேண்டும்? அது நமது கடமை அல்லாமல் எப்படி தியாகமாகும்? என் வாழ்க்கைக்கு அர்த்தமாக வந்ததற்கு நன்றி என்பதாக பெற்றோர் தானே பிள்ளைகளிடம் நன்றி காட்ட வேண்டும்? அதைத்தானே திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்!

“15 நிமிடம் நீ தனியாக போய் விளையாடு; நான் என் வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன். அதன்பின் ஒரு 10 நிமிடம் நீயும் நானும் சேர்ந்து விளையாடலாம்.” என்று என் மகனிடம் நான் கூறினால், நான் எதிர்பார்ப்பது 15 நிமிடம் எனக்கான நேரமாக இருக்க வேண்டும் என்பது. ஆனால் அதற்கு நடுவில் அவன் பத்தாயிரம் முறை வந்து, “நேரம் ஆயிற்றா?”, “தண்ணி வேண்டும்”, “கழிப்பறைக்குக் கூட்டி செல்” இத்யாதி இத்யாதி விஷயங்களை கேட்பான். இதற்குள் என்னுடைய 15 நிமிடம் முடிந்துவிடும். ஆனால் அடுத்த 10 நிமிடம் நான் அவனுடன் இருந்து தான் ஆக வேண்டும். “இதென்ன அநியாயமாக இருக்கிறது. எனக்கு 15 நிமிடம், அவனுக்கு 10 நிமிடம் என்பதுதானே ஒப்பந்தம். எனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனாலும் அவனுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தாக வேண்டும் என்பது நியாயம் இல்லை” என்று கணவரிடம் புலம்ப முடிகிறதே தவிர, மூன்று வயதான மகனுக்கு இது புரிவதில்லை. ஒப்பந்தம் செய்யத் தெரியாத ஒருவருடன் ஒப்பந்தமிட்டதாக நானே கற்பனை செய்து கொள்கிறேன் போலிருக்கிறது. அதனால்தான் திருவள்ளுவர் பெற்றோருக்கு பிள்ளைகள் செய்வதை உதவி என்கிறார் போலும்.

கடந்த காலத்திலும் தற்காலத்திலும் பெற்றவர்கள் தான் பிள்ளைகளுக்கு கொடுக்கிறார்கள் என்ற எண்ணம் தான் அதிகமாக இருக்கிறது. உண்மையில் பிள்ளைகளிடமிருந்து நாம் பெறுவது அதிகமாக (குறைந்தபட்சம் சமமாக) இருக்கிறது. “நமக்குக் கிடைப்பதும் நமது எதிரில் நிற்பவற்கு கிடைப்பதும் mutually exclusive ஆக இருக்க வேண்டியதில்லை. இருவருக்கும் வேண்டியதையும் கிடைக்க முடியச் செய்கிற வழியை கண்டுபிடித்து விட முடியும்; அதனால் நமக்கு கிடைக்க வேண்டியதை பறித்து விடக்கூடிய எதிரியாக அவரை பார்க்க வேண்டியதில்லை” என்பதை என் மகனைத் தவிர வேறு யாரும் எனக்கு கற்றுக் கொடுத்திருக்க முடியாது. ஏனென்றால் எதிரில் நிற்பது என் மகனாக இல்லாவிட்டால் அவரை எதிரியாக பாவிப்பது மிகச் சுலபம். என் மகனிடம் கற்ற இந்த பாடத்தை மற்றவர்களிடம் உபயோகப்படுத்தும் போது என் வாழ்க்கை மேன்மை அடைகிறது. ஆகையால் அவன் எனக்கு செய்வது உதவி; நான் அவனுக்கு செய்வது நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s