பிள்ளைபேறும் சொர்க்கமும்

சமீபத்தில் வாட்ஸாப்பில் வந்த ஒரு பதிவு என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அந்தப் பதிவைப் பகிர்பவர்கள் பெண் உயர்ந்தவள் என்று கூறும் பொருட்டு அதை அனுப்புகிறார்கள். அதை முழுமையாக வாசிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்; சாராம்சம் தெரிந்தால் போதும் என்று நினைத்தால் மேலேத் தொடரவும்.

அதாகப்பட்டது, ஆண் குழந்தையைப் பெற்றவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்களாம். ஆனால், பெண்ணைப் பெற்றவர்களோ அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களுக்கு முந்தைய தலைமுறை பத்து, பிந்தைய தலைமுறை பத்து என மொத்தம் இருபத்தியொரு தலைமுறைகள் சேர்ந்து சொர்க்கத்திற்குப் போவார்களாம். “ஆஹாஹா!! என்னே ஒரு பெண்ணை உயர்த்தும் உசத்தியானப் பேச்சு!” என்று சிலாகித்து கொண்டுதான் இந்த வாட்ஸாப் பதிவை முக்கால்வாசி அன்பர்கள் வாசிக்கிறார்கள்; பகிர்கிறார்கள்.

“என்னம்மா நீ! நல்லாத்தானே சொல்லி இருக்கு?” என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்குக் கேட்கிறது.

இன்சூரன்ஸ் கம்பெனிகாரன் இனிக்க இனிக்க பேசி விட்டு கையெழுத்து வாங்கும் இடத்தில் கடைசியில் குட்டியூண்டு எழுத்தில் விவகாரமாக எழுதி வைத்து இருப்பானே, அது போல இதிலும் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸில் தான் வைக்கிறான் ஆப்பு! அதாவது, பெண்ணைப் பெற்றால் இருபத்தியொரு தலைமுறைகளும் சொர்க்கத்திற்குச் சென்று விடலாம் என்று நீங்கள் கனவு கண்டால் அது நடக்காது. ஒரு பெண்ணைப் பெற்று, அவளை வயது வரும் வரை வளர்த்து, பின் கன்னிகாதானம் செய்து, அவள் அந்த வம்சம் விருத்தி அடையச் செய்தால் மட்டுமே உங்கள் கனவு பலிக்கும்.

இதில் நான் கூற விரும்பும் விஷயங்கள் இரண்டு. முதலாவது, ‘ஆண் குழந்தை பெற்றாலே சொர்க்கம் சேரலாம்; ஆனால் பெண் குழந்தை பெற்றால், மேலே சொன்ன அனைத்தும் செய்தால் மட்டுமே சொர்க்கம் சேர முடியும்’ என்பதுக் கண்டிப்பாக பெண்ணை உசத்தும் பேச்சாக இருக்க முடியாது. இரண்டாவது, கன்னிகாதானம். தெய்வீக மொழியாகிய சமஸ்க்ரிதத்தில் இருந்து கடன் வாங்க பட்ட இந்த வார்த்தையைப் போல பெண்ணை வேறு எதுவும் கேவலப்படுத்தி விட முடியாது என்பது என் எண்ணம். (தமிழில் இதற்கு இணையான சொல் உண்டு என்றால் கூறவும். தமிழ்ச் சமூகத்தில் அப்படி ஒரு வழக்கம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டாலும், உண்மையை அறிந்து கொள்வதை அவசியமாகக் கருதுகிறேன்.)

ஆடு வளர்த்து மாடு வளர்த்து அவைகளை சந்தையில் விற்பது போல அல்லது தானம் கொடுப்பதைப் போல பெண்ணை வளர்த்து வேறு ஒருவருக்கு கல்யாண சந்தையில் விற்பது அல்லது தானம் கொடுப்பது தான் கன்னிகாதானம். பசுமாடு என்பது லட்சுமி என்றும் நம் வீட்டில் ஓர் உறுப்பினர் என்றும் கூறுவது போய், பெண்ணை அஃறிணை பொருளாக்குவது தான் கன்னிகாதானம். இந்த தானம் செய்து விட்டால் மட்டும் போதும் என்றா சொல்கிறார்கள்? இந்த அளவுக்கு பெண்ணை இழிவு படுத்தியது போதாது என்று அதற்குப் பிறகு அப்பெண் அவள் சென்று அடைந்த குலம் விருத்தி ஆகச் செய்ய வேண்டும் என்று வேறு  கூறுகிறார்கள்.

ஒன்று, பிள்ளை பேறு பெற்றால் மட்டுமே ஒரு பெண் பெண்ணாகக் கருதப்படுவாள் என்னும் அநியாயம். பச்சையாகச் சொன்னால் பெண் என்பவள் பிள்ளை பெற்று எடுக்கும் இயந்திரம் என்று கூறும் கொடுமை. இன்னொன்று, உடலின் வெவ்வேறு பாகங்கள் மாறி மாறி வலிக்க, உண்ட உணவு வயிற்றில் தங்காது வாய் வழியே பீய்ச்சி அடிக்க, இரவில் உறங்கவும் முடியாமல் வேறொரு பக்கம் திரும்பிப் படுக்கவும் முடியாமல் தவிக்கத் தவிக்க ஒன்பது மாதங்கள் தன்னுள்ளே குழந்தையைச் சுமந்து, படாத பாடெல்லாம் பட்டு அதைப் பெற்று எடுப்பது… பிறர் வம்சம் விருத்தி அடையவாம்! இந்தக் கொடுமையை எங்கேப் போய்ச் சொல்வது?!

பெற்ற பிள்ளைக்கு வேலைக்காரி மட்டுமே அந்த பெண். மற்றபடி உரிமை எல்லாம் தகப்பனுக்கும் அவர் குடும்பத்தாருக்குமே என்று கூறுவதைக் காட்டிலும் வேறு எப்படி பெண்ணை அஃறிணைப் பொருளாக பாவிக்க முடியும்? தான் பெற்று எடுக்கும் குழந்தை தன் வம்சமும் விருத்தி அடைவதற்காகக் கிடையாதாம். பிறர் வம்சம் விருத்தி ஆக மட்டுமே தானாம்.

என்னைப் பொறுத்த அளவில், நான் பிள்ளை பெற்றது என் கணவரின் குலம் தழைக்க மட்டுமே இருந்தால்தான் என் தாயும் தந்தையும் சொர்க்கம் செல்ல முடியுமானால், அப்படி அவர்கள் அங்கே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் முக்கியமாகக் கருதுவது, என் குழந்தை என் பெற்றோருக்கும் வாரிசாக இருக்க வேண்டும் என்பது தான். பெயரன் வேண்டுமா அல்லது சொர்க்கம் வேண்டுமா என்று கேட்டால் பெயரன் தான் வேண்டும் என்று என் பெற்றோர் ஒருமித்த மனத்தோடு சொல்வர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

என் அம்மா என்னிடம் சிறு வயதிலேயே சொன்ன ஒன்றை என்னால் மறக்கவே முடியாது. “உன்னைத் தனக்குக் கீழானவள் என்று கூறும் ஆண் உன்னை எவ்வளவு மதிக்கிறானோ அதே அளவோ அல்லது அதை விடக் குறைவாகவோதான் உன்னைத் தன்னை விட மேலானவள் என்று கூறுபவன் மதிப்பான். முதலாமவன் உன்னை அடிமை என்று நேராகக் கூறுகிறான். மற்றவன் உன்னைத் தியாகி என்று கூறி அடிமை ஆக்குகிறான். ஆகையால், தனக்குச் சமமானவளாக உன்னைக் கருதும் ஒருவனை மட்டுமே நம்பு” என்றார். நான் பார்த்த வரையில் பெண்ணை தெய்வம் என்று கூறுபவர்களும் சரி, ஆணுக்கு இரண்டாம்பட்சம் ஆனவள் என்று கூறுபவர்களும் சரி, பெண்ணை மனிதப் பிறவியாக நடத்துவதில்லை.

பின் குறிப்பு: நல்ல ஆண்பிள்ளையாக என் அம்மா கருதுகிற மாதிரி ஒரு கணவர் எனக்கு அமைந்ததையும் மகிழ்ச்சியுடன் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இல்லாவிட்டால், இல்லற வாழ்வை விட்டுக் கொடுக்காமல் இது போன்ற வலைப்பதிவு செய்வது சாத்தியம் ஆகி இருக்காது.

தொடர்ந்து அடுத்த அத்தியாயங்களை வாசிக்க கீழே சொடுக்கவும்.

சமத்துவம்: அதிகாரம் இரண்டு
சமத்துவம்: அதிகாரம் மூன்று – பரிணாம உயிரியலும் இரு பால்களும்

One thought on “பிள்ளைபேறும் சொர்க்கமும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s