குழந்தைகள் உண்ணும் உணவு யார் பொறுப்பு?

நமது நாட்டில் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என்பது மிகப்பெரிய புகாராக இருக்கிறது. சிறு பிள்ளைகளாக இருக்கும்போது கொழுகொழுவென்று இருக்கவேண்டும்; வளர்ந்தபின் பெண்களாக இருந்தால் கொடியிடையுடனும் ஆண்களாக இருந்தால் கட்டுமஸ்தான உடலுடனும் இருக்க வேண்டும். எப்படி இது சாத்தியம் என்றுதான் புரியவில்லை.

எல்லின் சாட்டர் என்பவர் பொறுப்புகளை பிரித்துக் கொள்தல் (Ellyn Satter’s Division of Responsibility) என்ற முறையைக் கூறுகிறார். 1. எங்கு, 2. எப்பொழுது, 3. என்ன சாப்பிட வேண்டும் என்பது பெற்றோரின் பொறுப்பு. 4. சாப்பிட வேண்டுமா இல்லையா, 5. எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது குழந்தைகளின் பொறுப்பு.

ஓரளவு பசியுடன் பிள்ளைகளை உட்கார வைத்து தட்டில் ஓரளவு சமச்சீரான உணவுகளை வைத்துவிடுவது பெற்றோர்களின் வெற்றி. அதன் பிறகு சாப்பிடுவதும் சாப்பிடாததும் பிள்ளைகள் கையில். நல்லபடியாக சாப்பிட்டால் அது பிள்ளைகளின் வெற்றி. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது நாளை. உடல் நலத்தை பேணக்கூடிய உணவுகளை ருசித்து சாப்பிட பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது தான் நம் வேலை. தேவைக்கு மீறி அதிகமாக சாப்பிட வைத்து உடலை கொழுக்க வைப்பது அல்ல.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? “சரியா சாப்பிடுறதே இல்ல. இப்படி ஒல்லியாவே இருந்தா எப்படி?” என்று பிள்ளைகளிடமே கேட்கிறோம். அந்தக் குழந்தையின் தாயும் கூடவே சேர்ந்து, “ஆமாம் அத்தை/பெரியம்மா/சித்தி. சாப்பிடவே மாட்டேங்குது” என்று கூறினால், “இதை வாங்கி கொடு, உடல் எடை கூடும்; அதை செஞ்சி கொடு, நல்ல கொழுப்புச் சத்து” என்று அட்வைஸ் மழை பொழிவோம். ஒருவேளை இவையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் தாயாக இருந்தால், “ஏன்மா வெயிட் போடவே இல்லை” என்று அவளிடம் நேராகவே கேட்போம். அவள் தன் பொறுப்பை சரிவர செய்யாததுதான் பிள்ளை வேகவேகமாக எடை கூடாமல் இருப்பதற்குக் காரணம் என்பதாக தெரிந்தோ தெரியாமலோ மறைமுக குற்றச்சாட்டு வைப்போம்.

அதேநேரம் பிள்ளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது “எனக்கு இது வேண்டாம்.. பிடிக்கலை‌..” என்று கூறினால், குழந்தையின் முன்னே அம்மாவிடம், “அவனுக்கு பிடித்ததை மட்டும் கொடு; பிடிக்காததை சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தாதே!” என்போம். பிள்ளைக்கு அம்மாதான் தனக்கு பிடிக்காததை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிறாள் என்பது போன்ற எண்ணம் தோன்றச் செய்வோம்.

அக்கறை என்ற பெயரில் மற்றவர் தனிப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைப்பது நமது சமூகத்தில் பரவலாக நடந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் செய்வதை கேள்வி கேட்கும் போது அவளுடைய தனிப்பட்ட விஷயத்தின் உள்ளே நுழைகிறோம் என்ற விழிப்புணர்வு கூட இருப்பதில்லை. அறிவுரை கேட்காத ஒரு நபரிடம் சென்று வலுவாக அறிவுரை கூறுவது நாகரீகமற்ற செயல் என்பதும் தெரிவதில்லை.

சிறு குழந்தைகளை பொறுத்தவரையிலேயே தனக்கான உரிமையையும் பொறுப்பையும் அவர்களிடமே விட்டுவிட வேண்டும் என்று பரவலாக பேசப்படுகிற காலம் வந்துவிட்டது. அவர்கள் வயிற்றில் பசி/இடம் இருக்கிறதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அதுவே பிற்காலத்தில் தன் உணவின் அளவை தான் தீர்மானிக்க வேண்டும்; உணவு பரிமாறுபவர் தீர்மானிக்க கூடாது என்ற புரிதலை வரவழைக்கும். உணவுக்கும் அவர்களுக்குமான உறவை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s